பிரிட்டன் நிறுவனம் வெளியிட்ட சிறந்த ஆராய்ச்சி பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலில், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., முதலிடத்தை பிடித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த, 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' என்ற நிறுவனம், உலக அளவில், உயர் கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலைகளின் தரவரிசை பட்டியலை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.இந்நிலையில், 2022ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், சிறந்த 200 பல்கலைகள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில், 'மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' கல்வி நிறுவனம், தொடர்ந்து, 10வது ஆண்டாக, முதலிடத்தை பிடித்துள்ளது.
இதில், இந்திய கல்வி நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன. அதன்படி, மும்பையில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' நிறுவனம், 177வது இடத்தை பிடித்துஉள்ளது. இதேபோல், டில்லி ஐ.ஐ.டி., 185வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு, 193வது இடத்தில் இருந்த டில்லி ஐ.ஐ.டி., தற்போது, தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்' நிறுவனம், 186வது இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில், சிறந்த ஆராய்ச்சி பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலில், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பிரிவில், கவுஹாத்தி ஐ.ஐ.டி., நிறுவனம், 41வது இடத்தை பிடித்துள்ளது.
தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய கல்வி நிறுவனங்களுக்கு, நம் பிரதமர் மோடி, 'டுவிட்டர்' வாயிலாக வாழ்த்து செய்தியை வெளியிட்டார். அதில், “மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள், உலகளாவிய சிறப்பை அடைவதற்கு தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்,” என, உறுதி அளித்தார்.
0 Comments