தமிழ்நாட்டில் பிரபலங்களின் பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி அவர்களது நண்பர்களுக்கு அவசர தகவல் அனுப்பி பணம் பறிக்கும் கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உயர் காவல் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் என நூற்றுக்கணக்கானவர்களிடம் முகநூல் மூலம் முகம் காட்டாமல் பணம் பறிக்கும் கொள்ளையர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
முகநூலில் தினந்தோறும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வரும் பிரபல காவல் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி அவர்கள் பெயரில் போலியான முக நூல் கணக்குகளை தொடங்கி, அவர்களது நட்பு வட்டாரத்தில் உள்ள வசதியான நபர்களை அறிந்து, அவசர பண உதவி தேவைப்படுவது போல உதவி தேவைப்படுவோரின் வங்கி கணக்கிற்கும், கூகுல் பே எண்ணுக்கும் பணம் அனுப்ப சொல்லி கோரிக்கை விடுத்து பணத்தை பறித்த கும்பல் தற்போது வரை சிக்கவில்லை..!
அதன் நீட்சியாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அவரது மனைவி லதா பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு உதவ பணம் தேவைப்படுவது போல தகவல் அனுப்பி பணம் பறித்துள்ளனர்.
இன்னும் சிலரிடம் அவசரமாக பணம் தேவைப்படுகின்றது என்று கூறி அனுப்பி வைக்க கூறியுள்ளனர். உஷாரான சிலர் சம்பந்தப்பட்டவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததால் மோசடி கும்பல் குறித்து சென்னை பெரு நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிலர் 5 ஆயிரம் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தி ஏமாந்துள்ளனர்.
இந்த நிலையில் தினந்தோறும் முகநூலில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திவந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய்கார்த்திகேயன் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி பலரிடம் பணம் வசூலித்த தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்ட ஆட்சி தலைவர் விஜய்கார்த்திகேயனின் நட்பு வட்டத்தில் உள்ளவருக்கு தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், காலையில் திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறி தகவல் அனுப்பி பணம் பறிக்க முயன்றுள்ளனர்.
சிலர் இதனை உண்மை என்று நம்பி ஏமந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர்கள் மட்டுமல்ல முகநூலில் நண்பர்களுடன் முப்பொழுதும் மூழ்கி கிடப்பவர்களை குறிவைத்து தமிழகம் முழுவதும் ஏராளமான நபர்கள் பெயரில் இந்த பணம் பறிப்பு நடந்து வருகின்றது. ஆன்லைன் வாயிலாக மட்டும் சென்னை காவல் ஆணையருக்கு நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. வி.ஐ.பிக்கள் பாதிக்கப்படுவது மட்டும் தெரிகின்றது. ஆயிரக்கணக்கில் பணத்தை பறிகொடுத்துவிட்டு பலர் தவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முகநூலில் தினமும் ஆக்டிவாக இயங்கும் நபர்கள் தான் இந்த கும்பலின் முதல் குறி..! என்று கூறப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள், முக நூலில் குறுந்தகவல் அனுப்பினால் பதில் வருகின்றதா? என்பதை குறுந்தகவல் அனுப்பி பரிசோதிக்கின்றனர்.
அப்படி பதில் வந்தால் அதனை வைத்து சம்பந்தப்பட்ட பிரபலங்கள் முகநூல் நண்பர்களிடம் மெசஞ்சரில் தினமும் உரையாடுவதை உறுதி செய்து கொள்கின்றனர். அப்படிப்பட்ட நபர்களின் பெயரில் உடனடியாக போலியான கணக்குகள் தயாரித்து பணம் பறிக்கும் வேலையை செய்துவருவதாக போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்று போலீசார் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். உங்களுக்கு தெரிந்தவரது பெயரில் இருந்து யாராவது முகநூல் வழியாக பண உதவி கேட்டால், முதலில் செல்போன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு உறுதி செய்யாமல் பணம் அனுப்பக் கூடாது. உங்கள் பெயரிலே வேறொரு போலியான கணக்கு இயங்குவது தெரியவந்தால் உடனடியாக, உங்கள் முகநூலில் அதுகுறித்து புரொபைல் ஸ்க்ரீன் ஷாட் உடன் போலியானது என்பதை பதிவிட்டு உங்கள் நண்பர்களை உஷார் படுத்துங்கள்..! கூடுமானவரை முகநூல் மூலம் நண்பர்களிடம் பண உதவி பெறுவதை தவிர்ப்பது இந்த மோசடியை முற்றிலும் தவிர்க்க உதவும் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , ஏரல் கிளை - மாணவரணி , தூத்துக்குடி மாவட்டம்.
0 Comments