No CAA and NRC in India

இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய அரசிலமைப்பிற்கு எதிரானது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. கோபால கௌடா தெரிவித்துள்ளதாக, லைவ்லா செய்தி வெளியிட்டுள்ளது. குடியுரிமை, உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு வரம்புகள்’, என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் கே.எஸ். சௌஹான் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது அவர் இந்தக் கருதைத் தெரிவித்துள்ளார். ”மதத்தின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தும் விதமாக, நாடாளுமன்றமோ மாநில சட்டமன்றமோ ஒரு சட்டத்தை இயற்ற முடியாது” என 1994-ம் ஆண்டு எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால், “மக்களை மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்தும் இந்திய குடியுரிமை (திருத்த) சட்டம், இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்பதே எனது கருத்து” என கோபால கௌடா தெரிவித்ததாக, லைவ்லா கூறியுள்ளது. “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் 50 விழுக்காட்டிற்கு அதிகமான மக்கள் கல்வியறிவு பெறாத, ஆவணங்களைப் பாதுகாக்க தெரியாத மக்கள் உள்ள ஒரு நாட்டில், ஒருவர் தன் பிறப்பு சான்றிதழையும்தன் பெற்றோரில் ஒருவர் இந்திய வம்சாவளியினர் என்பதற்கான சான்றிதழையும் சமர்ப்பித்து இந்திய குடியுரிமையை நிருபிக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது” என அவர் கூறியுள்ளார். ”இந்தியா குடியரசு ஆகி 70 ஆண்டுகளை நிறைவடைந்த நிலையில், துன்புறுத்தல் காரணமாக மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்து வசிப்பவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்த மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலங்கை போன்ற நாடுகளில் வசித்து இந்தியாவிற்கு திரும்பிய இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டதாக லைவ் லா தெரிவித்துள்ளது ”இது ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்பானது அல்ல. தேசிய குடியுரிமை பதிவேடு மத பாகுபாடின்றி நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்பதை மறந்து விடக் கூடாது” என அவர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளோ, பெண்களோ அல்லது வேறு எந்த ஒரு பிரிவினரோ, அசாம், வடகிழக்கு இந்தியா அல்லது நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள், மத வேறுபாடின்றி, தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் இல்லாவிட்டால் நாடற்றவர்களாக மாறப்படுவார்கள் என்பது அப்பட்டமாக மனித உரிமைகளை மீறுவதாகும் என கோபால கௌடா வலியுறுத்தியதாக லைவ்லா செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments